குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான பேர் குழுமி ஒரு மாதத்திற்கு மேல் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தும் போராட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் ஆசாத் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜம்மா மசூதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரதமரையும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் மதிக்கும் வகையில் ஆசாத் நடந்துகொள்ள வேண்டும் என எச்சரித்து அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
பிணையில் வந்துள்ள ஆசாத், ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களைச் சந்தித்து ஆதாரவு தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆசாத், ”பிரதமர் மோடிக்கு மதிப்பளிக்க வேண்டும் என நீதிமன்றம் எனக்கு அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். மாதம்தோறும் 'மன் கீ பாத்' என்ற மனதின் குரல் நிகழ்ச்சியை நடத்தும் மோடி, மக்களின் மனக்குரலைக் கேட்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் போராட்டம் மக்கள் இயக்கமாக உருவாகியுள்ளதாகக் கூறிய ஆசாத், நாடு முழுவதும் ஷாஹீன் பாக் போராட்டம் போல ஒரு லட்சம் போராட்டங்கள் நடைபெற வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: குடும்பத்தின் மூத்த பிள்ளைபோல் வேலை செய்தேன் - கெஜ்ரிவால்