லடாக் எல்லைப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரைக் குவித்துள்ளன.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர உயர்மட்ட அளவில் தொடர் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், மோதலின் மையப் புள்ளிகளுள் ஒன்றான கால்வான் பள்ளத்தாக்குக்கு எவ்வாறு காஷ்மீரி பெயர் சூட்டப்பட்டது என காஷ்மீரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
'லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்' என்று அழைக்கப்படும் இந்திய - சீன எல்லைக் கோடு அருகே உள்ள பள்ளத்தாக்கு ’கால்வான்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு வழியாக இமாலய மலைத் தொடரிலிருந்து கால்வான் எனும் நதி பாய்ந்து ஓடுகிறது.
80 கி.மீ. நீளம் கொண்ட இந்த நதி, கரகோரம் மலையிலிருந்து அக்சை சின், கிழக்கு லடாக் வழியாக, ஷையோக் நதியை அடைகிறது. இந்த நதி ராஜதந்திர அடிப்படையில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 1962ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையே போர் மூள்வதற்கு கால்வான் பள்ளத்தாக்கு முக்கியக் காரணியாய் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ குடும்பத்தைச் சேர்ந்த குலாம் ரசுல் ஷா (எ) கால்வான் என்பவரின் பெயரே இந்த பள்ளத்தாக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. கால்வானின் தந்தை ஒரு காஷ்மீரி ஆவார். அவரது பாட்டனார், காரா கால்வான் தோக்ரா மன்னர்களுக்கு பயந்து, காஷ்மீரை விட்டு தப்பிச் சென்று, பல்திஸ்தானில் குடி பெயர்ந்துவிட்டார்.
இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள குலாம் ரசுல் கால்வானின் பேரன், முகமது அமின் கால்வானிடம் பேசியபோது, "தோக்ரா நாட்டு மன்னரின் ஆட்சியின்போது, அவர்களிடமிருந்து தப்பிக்க, குலாம் ரசுல் கால்வான் அங்கிருந்து தப்பி, பல்திஸ்தானில் குடிபெயர்ந்தார்.
1878ஆம் ஆண்டு ’லே’ பகுதியில் பிறந்த குலாம் ரசுல் கால்வான், தன் 12ஆவது வயதில் இங்கிலாந்து பயணிகளுக்கு லடாக்கைச் சுற்றிக்காட்ட வந்தார். அவரது பிள்ளைகளும், பேரன்களுடன் ’லே’வில் குடி பெயர்ந்தனர். அவர்களது குடும்பத்தினர் தற்போது லே பகுதியில் தான் வாழ்ந்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இந்தியா - சீனா மோதல் அப்பகுதியில் வாழ்வோரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் அமின் வேதனைத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய ராணுவத்துக்கு லடாக் மக்கள் முழு ஆதரவு அளிப்பதாகவும், ராணுவம் உதவி கேட்டால் செய்யத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க : இந்தியா-சீனா மோதல்: தமிழ்நாட்டு வீரர் வீரமரணம்