காஷ்மீரிலுள்ள புல்வாமாவில் கடந்த வருடம் பிப்ரவரி 14ஆம் தேதி துணை ராணுவ படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் அமைச்சர் பவாத் சவுத்ரி, "புல்வாமாவில் நமது வெற்றி, இம்ரான் கானின் வெற்றி" என்ற ரீதியில் பேசியிருந்தார். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று பொருள்பட அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்பது உலகத்திற்கே தெரியும். எவ்வளவு மறைத்தாலும் அந்த உண்மை மறையாது.
ஐநாவால் தடை செய்யப்பட்ட பல பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகழிடமாக இருக்கிறது. அப்படிப்பட்ட பாகிஸ்தான் பாவ நாடகத்தை நடத்தக் கூடாது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமளித்த பவாத் சவுத்ரி, "புல்வாமா தாக்குதலை நான் பாராட்டவில்லை. அதன் பிறகு, இம்ரான் கான் அரசு எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத்தான் பாராட்டினேன். பாகிஸ்தான் ஒருபோதும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்காது" என்றார்.
இதையும் படிங்க: பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்