கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இது மாபெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொருளாதார பாதிப்பை சரி செய்ய, 20 லட்சம் கோடி ரூபாய், பொருளாதார மீட்புத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அதன்படி கடந்த இரு நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளுக்கு கடன் திட்டங்கள், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பிணையின்றி வங்கிகளில் கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி வழங்கப்படும் என்றும், 4 ஆண்டுகளில் கடன் தொகையைச் செலுத்தலாம், முதல் ஓராண்டு செலுத்தத் தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அதேசமயம், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில், 'அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலுவைத்தொகை வைத்துள்ளன' என்று தெரிவித்தார்.
இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி இருவரையும் கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.
அதில், 'மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பேட்டியில், அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்தாமல் வைத்துள்ளன' என்றார். நிதியமைச்சர் நிர்மலா சீதராமன், '45 லட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய்க்குப் பிணையில்லாத கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
நான் கேட்கும் கேள்வியெல்லாம், யார் கடன் கொடுத்தது? யார் யாரிடம் கடன் பெற்றார்கள்? என்பது தான். முதலில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், நிதின் கட்கரியும் தங்களின் கணக்குகளைச் சரிசெய்துகொள்ளட்டும். அதன் பின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அரசின் உதவியில்லாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்' என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உடனுக்குடன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்