பீமா கோரேகான் வன்முறை சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்துவரும் ஏசு சபையின் அருள்தந்தை ஸ்டான் சுவாமியை (வயது 82) அக்டோபர் 8ஆம் தேதியன்று தேசியப் புலனாய்வு முகமை கைது செய்தது.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து என்ஐஏ, அவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சிக்கு நிதி திரட்டியதாகவும், மாவோயிஸ்ட் கட்சி தொடர்பான ஆவணங்கள் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், ஸ்டான் சுவாமியைக் கைது செய்தபோது என்ஐஏ அலுவலர்கள் எந்தவொரு ஆணையையும் அவரிடம் காட்டவில்லை என்றும், கடுமையான முறையில் அவர்கள் ஸ்டான் சுவாமியிடம் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டான் சுவாமி கைதுக்கு நாடு முழுவதுமுள்ள மனித உரிமை ஆர்வலர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சுவாமியின் மீதான கைது நடவடிக்கையை ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "ஏழை எளியவர்கள், பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக ஓயாது உழைத்துவரும் 83 வயதான முதியவர் ஸ்டான் சுவாமியை கைது செய்வதன் மூலம் மத்திய பாஜக அரசு நாட்டுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறது? அரசை நோக்கி கேள்வியெழுப்பும் ஒவ்வொரு குரலையும் அடக்குவது தான் ஜனநாயக அணுகுமுறையா? ஏன் இந்தப் பிடிவாதம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்கண்டில் பெரிதும் அறியப்பட்ட சமூக சேவகரான ஸ்டான் சுவாமி, பழங்குடியின மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று புனேவிலுள்ள பீமா கோரேகான் கிராமத்திலுள்ள பீமா கோரேகான் நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அந்நிகழ்வில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் தொடர்பான சதி வழக்கில் அதற்கு காரணமானவர்களென 156 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், உபா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் இதுவரை இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.