உள் துறை அமைச்சர் அமித் ஷா கோவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், அவர் தற்போது மீண்டும் டெல்லியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 55 வயதாகும் அமித் ஷா, நேற்றிரவு 11 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அங்கு அவருக்கு எய்மஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குர்கான் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பின் கரோனாவில் இருந்து குணமடைந்த அவர், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இருப்பினும், அவருக்கு மீண்டும் உடல் வலி மற்றும் சோர்வு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அமித் ஷா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் ஆகஸ்ட் 31ஆம் தேதிதான் அவர் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!