மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் 151 இடங்களை ஜெகன்மோகன்ரெட்டியின் ஒய்எஸ்ஆர் கட்சி வென்று ஆட்சியை பிடித்தது. அதேபோல் மக்களவையிலும் 25இடங்களை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஐந்து துணை முதலமைச்சர்கள், விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 12,500 உதவித்தொகை, சுகாதார ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் ஊதிய உயர்வு, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ரூ. 12 ஆயிரம் ஊக்கத் தொகை என பல திட்டங்கள் இதில் அடங்கும்.
இதுமட்டுமின்றி படிப்படியாக மதுவிலக்கும் அமுல்படுத்தப்படும் என அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆந்திர காவல் துறையினருக்கு வார விடுமுறை அளிக்கும் முடிவையும் எடுத்துள்ளார்.