உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சமூக ஊடக செயலியான எலிமென்ட்ஸ் செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் இதன் அறிமுக விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்ளும்போது உறுதியாக இருக்க வேண்டும் என அப்போது அவர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "அனைத்து துறைகளின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆத்மநிர்பார் பாரத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் நம் நாடு உள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இம்மாதிரியான சவால்களை எதிர்கொள்ளும்போது நாம் உறுதியாக இருக்க வேண்டும். சுயசார்பு இந்தியாவை உருவாக்க பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார். மனித வளத்தை மேம்படுத்தி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உள்கட்டமைப்பு, விநியோக சங்கிலியை வலுப்படுத்துவதே ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் நோக்கமாகும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் தானாக முன்வந்து, உள்நாட்டு சமூக ஊடக செயலியான எலிமென்ட்ஸ் செயலியை உருவாக்கியுள்ளனர். இதனை நான் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறேன். எட்டு இந்திய மொழிகளில் இது வெளியிடப்பட்டுள்ளது. ஐடி துறையின் தலைநகராக இந்தியா விளங்குகிறது. இத்துறையில் தலைசிறந்த பெரும்பான்மையானோர் நம் நாட்டை சேர்ந்தவர் ஆவர். இதுபோன்ற பல கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் தொடரும் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: எல்லையிலிருந்து 2 கி.மீ. பின்வாங்கிய சீனப் படை - இந்திய ராணுவம் தகவல்