மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பாஜக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்திற்குச் செய்த நல திட்டங்களை மக்களிடம் விளக்குவதற்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், "எந்த அரசாலும் ஐந்து ஆண்டுகளில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது. கடந்த 15 ஆண்டுகளில் மற்ற அரசுகள் செய்ததைவிட மோடி தலைமையிலான மத்திய அரசும், என் தலைமையிலான மாநில அரசும் மாநிலத்திற்கு அதிகம் செய்துள்ளது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200 தொகுதிகளை வெல்லும் என சிலர் கூறுகின்றனர். ஆனால், பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 250 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம். தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதலமைச்சராவது உறுதி" என்று பேசினார்.