உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பெருந்தொற்று நோய் இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, மேற்குவங்க மாநிலத்தில், இதன் பரவல் இரண்டாம் கட்ட அபாய நிலையை எட்டியுள்ளது.
கரோனா தீநுண்மிப் பரவலைத் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுவருகிறது. இதுவரை பெருந்தொற்றால் 1,786 பேர் பாதிக்கப்பட்டும், 171 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மேற்கு வங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கரோனா தீநுண்மி பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித் துறை, உள்ளாட்சித் துறை என அனைத்துத் துறைகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.
மேலும், மேற்கு வங்கம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள், கரோனா பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்றுநோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்களைத் தனிமைப்படுத்தி, மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சிவப்பு குறியீட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் சிறப்பு சிகிச்சைகளை அளித்துவரும் ஐந்து மருத்துவமனைகளில் குழுக்களை அமைத்து மேற்பார்வை, மருத்துவக் கண்காணிப்பை மேற்கொள்ள மேற்கு வங்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள், சிறப்பு சிகிச்சைகளை அளித்துவரும் ஐந்து மருத்துவமனைகளுக்குத் தொடர்ந்து வருகைபுரிந்து, ஆய்வுகளை மேற்கொண்டு சுகாதாரத் துறைக்கு அறிக்கைகளை அனுப்புவார்கள்.
இக்குழு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பிற பொருள்களின் இருப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து அவற்றைச் சீர்செய்யும்.
குழுவின் பின்னூட்டங்கள், பரிந்துரைகள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு குறைகள் இருந்தால் மாநில அரசால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசின் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : குடிபெயர்ந்தோரை மேற்குவங்கம் அழைத்துவர 8 ரயில்களுக்கு அனுமதி!