உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவல் இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாடு முழுவதும் மக்கள் அவரவர் வீடுகளிலேயே கடந்த 4 மாதங்களாக அடைந்துள்ளனர். இதனால், நீர் பயன்பாட்டளவு அதிகரித்து ஆங்காங்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான உண்மை நிலவரத்தை வெளிக்கொணர மத்திய ஜல் சக்தி அமைச்சகம், நீரியல் ஆர்வலர்களுடன் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆய்வொன்றை நடத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், கோவிட் -19 தொற்றுநோய் பரவல் அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை தூய்மைப்படுத்தவும், உடலில் கிருமி நீக்கம் செய்யவும் அதிகளவில் நீரை பயன்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது.
மேலும், "இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மக்களை குறைந்தபட்சம் 20-30 விநாடிகள் கழுவ வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதால், அந்த நீர் இரண்டு லிட்டர் வரை பயன்படுத்தப்படும். நான்கு முதல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் இதைச் செய்தால், தண்ணீரின் பயன்பாடு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 70 லிட்டரை எட்டும் என அறிய முடிகிறது. ஒரு முறை கை கழுவுவதற்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கிருமி நீக்கம் செய்வது போன்ற நடைமுறைகளை அரசு ஊக்குவித்திருந்தாலும், அது தண்ணீரின் பயன்பாட்டில் அதன் பிற பாதிப்புகளை தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மூலமாக உணர்கிறது. இதன் விளைவாகவே, தற்போது மும்பை போன்ற பெருநகரங்களில் நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கிராமங்களை விட நகர்ப்புறங்களில் தான் பெரும்பாலும் இந்த ஊரடங்கில் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்துகின்றன என்பதை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. நகரங்களில் மக்கள் தொகை அடர்த்தியாக இருப்பதால், அவர்கள் கிராமவாசிகளை விட தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். மேலும், கிராமவாசிகளுக்கு ஏரிகள், நீர்நிலைகள் போன்ற ஆதாரங்கள் உள்ளன. ஆனால், நகர்ப்புற மக்களுக்கு குழாய் நீர் அல்லது நிலத்தடி நீரை மட்டுமே அணுக முடியும். எனவே, நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் அவசியம் என்பதால் மக்களின் அதிகளவு நீர் பயன்பாட்டை அரசால் தடுக்க முடியவில்லை. மக்கள் உணர்வுப்பூர்வமாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் தேவையற்று தண்ணீர் குழாய் திறந்து வைத்திருப்பது தவிர்க்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய நீர் பாதுகாப்பில் பணிபுரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பாலகிருஷ்ணன், "நீரின் பயன்பாட்டை கண்காணிக்க ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை சரிசெய்வது அவசியம்.
ஊரடங்கு தொடரும் இந்த வேளையில், மக்களும் அரசும் தண்ணீரின் இருப்பு அளவைக் கண்காணிக்க வேண்டும். இந்தியாவின் நீர் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 2030ஆம் ஆண்டில் நாம் இப்போது பயன்படுத்தும் நீரை விட இரு மடங்கு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை நிர்ணயிக்க வேண்டும். அதன் மூலமாக அரசு தொலைதூரத்தில் இருந்து நீர் பயன்பாட்டை, வள இருப்பை கண்காணிக்க முடியும். வீடுகளில் ஏதேனும் அதிகமான தண்ணீரைப் பயன்படுத்தினால், தண்ணீரை எவ்வாறு திறமையாகப் பயன்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்குக் கற்பிக்க முடியும்.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 20 விழுக்காடு நீர் விநியோகத்தை குறைக்க மும்பை மாநகராட்சி தயாராகி வருகிறது. கோவிட்-19 பாதிப்பை அதிகமாக கண்டிருக்கும் டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள வீடுகளின் நீர் பயன்பாட்டை இன்னும் கூர்மையாக மதிப்பிடுவது அவசியம்" என அவர் தெரிவித்தார்.