மத்தியப் பிரதேச காங்கிரஸ் முகமாக இருந்து வந்த ஜோதிராதித்யா சிந்தியா, தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் இணைந்தார். இவரின் ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கும் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் நவம்பர் மூன்றாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிந்தியா கடும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தாப்ரா தொகுதியில் போட்டியிடும் இமர்தி தேவிக்கு ஆதரவாக சிந்தியா பேசும்போது, காங்கிரஸ் சின்னமான கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என தன்னை அறியாமல் தெரிவித்தார். இது குறித்த வீடியோ பதிவு சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கட்சி மாறிய பிறகும் பழைய கட்சியைச் சிந்தியா இன்னும் மறக்கவில்லை என ட்விட்டர்வாசிகள் அவரை கலாய்த்து வருகின்றனர். ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தது குறிப்பிடத்தக்கது.