இந்தியாவில் முதல்முறையாக செய்தி ஊடகங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும் முயற்சியில் களமிறங்கியுள்ள நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்தின் முயற்சிகளை கௌரவிக்கும் விதமாக லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிபரப்பு மாநாடு, உயரிய விருதுகளில் ஒன்றான 'எங்கெங்கும் செய்தி (Content Everywhere)' விருதை வழங்கியுள்ளது.
செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளின் மூலம் மட்டுமே செய்திகள் ஒளிபரப்பப்பட்டுவந்த நிலையில், முதன்முதலாக நாடு முழுவதிற்குமான செய்திகளை பல்வேறு மொழிகளில் ஒரு செயலி மூலம் டிஜிட்டல் வடிவில் வழங்கிக்கொண்டிருக்கிறது நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனம். ஈடிவி பாரத் செய்தி நிறுவனமும், அவெக்கோ நிறுவனமும் இணைந்து, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்குமான பிரத்யேக மொழிகளில் செய்திகளை உருவாக்குகிறது.
இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, அஸ்ஸாமி, ஆங்கில மொழிகளில் செய்திகளை ஒளிபரப்பிவருகிறது. மேலும், செல்ஃபோன், டேப்லெட், கணினிகளில் இயங்கும் 24 முழுநேர செய்தி சேனல்களையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
இந்நிலையில், ஊடகம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் சர்வதேச ஒலிபரப்பு மாநாடு (International Broadcasting Convention) ஒரு செயலியின் மூலம் நாடு முழுவதுமுள்ள மக்களை கவரும் செய்தி நிறுவனமான நமது ஈடிவி பாரத்திற்கு உயரிய விருதுகளில் ஒன்றான 'எங்கெங்கும் செய்தி (Content Everywhere)' விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஈடிவி பாரத்தின் நிறுவனர் ராமோஜி ராவை ஹைதராபாத்தில் ஐபிசி குழுவினர் சந்தித்தனர். அவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு நிறுவனர் ராமோஜி ராவ்விடம் அந்த விருதை வழங்கி கௌரவித்தனர்.