மும்பையின் முல்லாந்த் பகுதியிலிருந்து வோர்லி பகுதிக்கு மும்பை மாநகரப் பேருந்து ஒன்று மூன்று பயணிகளுடன் நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்து மாதுங்கா அருகேயுள்ள மகேஸ்வரி உதயான் பகுதியில் சென்றபோது பேருந்தின் ஓட்டுநருக்கு அருகே இருந்த எலக்ட்ரிக் போர்டில் தீப்பிடித்துள்ளது. பின்னர் தீ பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து, ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.
பின்னர் அவர் பயணிகள் மற்றும் நடத்துனரை கீழே இறக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சில மணி நேரத்தில் தீயை அணைத்தனர். பேருந்தில் மின்கசிவு ஏற்பட்டதே தீவிபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உரிய நேரத்தில் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் எந்தவிதமான உயிர்ச் சேதமும் காயமும் ஏற்படவில்லை.
இந்த ஆண்டில் மும்பை மாநகரப் பேருந்தில் ஏற்பட்ட இரண்டாவது தீ விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மே மாதம் கூர்கான் அருகே ஒரு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது.