தேசிய குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த போது, பாஜக மதத்தால் நாட்டை துண்டாக்க நினைக்கிறது என்ற விமர்சனம் எதிர்கட்சிகளால் முன்நிறுத்தப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, 'மதத்தால் நாட்டை துண்டாக்கியது காங்கிரஸ்தான். நாங்கள் அல்ல' என்றார். மேலும், 'பாஜக சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்க நினைக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசத்தில் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு துரத்தப்பட்ட மக்களுக்கு' என்றார்.
அமித் ஷாவின் கருத்தை எதிர்கட்சி தலைவர்கள் மறுத்தனர். இந்தியா அனைவருக்குமான நாடு என்று அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், 'பிரச்னை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. அனைத்து மக்களுக்கும் உள்ளது. இந்த அவசர சிந்தனை அடிப்படையில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இந்தியா அனைவருக்கும் பொதுவான நாடு. இங்கு அனைவரும் சமம். அனைவரும் இந்தியா என்ற ஒரு ஒற்றைப் புள்ளியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த மசோதா மூலம் முஸ்லிம்கள் மட்டும் வெளியேற்றப்படுகின்றனர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அமைச்சரவையில் உள்ள எத்தனை அமைச்சர்களுக்கு உரிய பிறப்பு சான்றிதழ் உள்ளது? நம் நாட்டில் ஆவணங்கள் அப்படிதான். முஸ்லிம்கள் எங்கு பிறந்தார்கள் என்பதை எப்படி நிருபிக்க முடியும். நிலைமை இப்படியிருக்க, முஸ்லிம்களை மட்டும் எப்படி ஊடுருவல்காரர்கள் என்று அழைக்க முடியும். இந்த மசோதா முஸ்லிம்கள் அல்லாதோருக்கு அனுமதி அளிக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்தும அமித் ஷா சரியாக அறியவில்லை. அவர் வரலாறு பாட வகுப்புகளை சரியாக கவனிக்கவில்லை போல தெரிகிறது' என்றார்.
இதையும் படிங்க: சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அரசுக்கு கடமை உள்ளது - சீதாராம் யெச்சூரி