இந்தியாவில் கோவிட் -19 நெருக்கடிக்கு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது விவாதத்திற்குரியது. தொடர்ச்சியான ஊரடங்கால் கடுமையான மன உளைச்சலில் இருக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தெரியாத நிலையில், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்காக நடக்கும் போராட்ட காட்சிகள் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.
நகர்ப்புறங்களில் இருந்து தங்கள் ஊர்களுக்கு திரும்பும் அதிக எண்ணிக்கையிலான குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நகர்வு கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அவர்கள் மீதான சமூக -அரசியல் அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது.
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசாங்கத்தால் பெயரளவுக்கு விடப்படும் சிறப்பு ரயில்களில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை சமூக ஊடகங்களில் காட்டுவது என்பது அவர்கள் பல தலைமுறையாக சந்தித்து வரும் பல ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகின்றன.
பின்வரும் பகுதிகள் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நிலைக்கு விமர்சன ரீதியாக மூன்று முக்கிய ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகின்றன.
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் ஒரு பெரிய சவால் ஒரு புதிய வடிவிலான அந்நியப்படுதல் மற்றும் பொருள் இழப்பு ஆகியவைதான். தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பாரம்பரிய உறவைப் போலன்றி, தாராளமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் முதலாளிகளுடன் எந்த உறவையும் கொண்டிருக்கவில்லை.
முதலாளிகளிடமிருந்து தொழிலாளர்களை அந்நியப்படுத்துவதிலும் முக்கியமாக தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக தன்னை சார்ந்து இருப்பதற்கும் ஒப்பந்தக்காரர் ஒரு முக்கிய பங்காற்றுகிறார் . குடிபெயர்ந்த தொழிலாளர்களின் முக்கிய அங்கமாக பெரும்பாலும் பதிவு செய்யப்படாத, ஒப்பந்தக்காரரின் தயவில் எந்த வேலையானாலும் செய்ய தயாராக இருக்கும் தொழிலாளர்கள், அவர்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
பதிவு செய்யப்படாத ஒரு தொழிலாளி தனது சொந்த நலன்களைத் தவிர்த்து முதலாளி மற்றும் ஒப்பந்தக்காரர்களின் நன்மைகளுக்கு சிறப்பாக வேலை செய்கிறார்.
வேலையில் இருந்து தொழிலாளர்களை இடையிலே நிறுத்துதல் போன்ற செயல்கள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் விரைவான நகரமயமாக்கல் முயற்சிகளில் ஒரு சாதாரண அம்சமாகும். முன்னெப்போதும் கண்டிராதவகையில் ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, முதலாளி மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளர்களின் நலனை கைகழுவி அவர்களை பொருளாதார பாதிப்பின் விளிம்பிற்கு தள்ளினர்.
ஊரடங்கின் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாத அரசாங்கங்களின் அலட்சியம் அரசியல் சமத்துவமின்மையின் அம்சத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் வாழ்க்கை சூழலுக்கு காரணம் அரசியல் செல்வாக்கு இல்லாதது மற்றும் தேர்தல் அரசியலில் மோசமான பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டு முக்கியமான காரணிகள் தான் என்று கூறலாம்
தொழிலாளர்கள் பூர்வீக இடத்திலிருந்து தொலைதூர நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வது அவர்களை அரசியல் ரீதியாக பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் அவர்களின் நலன்களுக்காக பேரம் பேசுவதற்கான விருப்பமோ அல்லது அரசியல் சக்தியோ அவர்களிடம் இல்லை. குறிப்பாக, வேலைக்காக ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு அல்லது ஒரு நகரத்திற்குள் பல இடங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் அரசியல் கட்சிகளால் சாதகமான வாக்காளர்களாகக் கருதப்படுவதில்லை.
அரசியல் கட்சிகள் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வாக்கு வங்கிகளின் தேவையை உணர்ந்தவுடன், அவர்கள் தொலைதூர இடங்களில் இருக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், 2019 ஆம் ஆண்டு மாநில மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்பு 2018 டிசம்பரில் குஜராத் மாநிலம் சூரத்துக்கு ஒடியா மாநில குடிபெயர்ந்த தொழிலாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ந்திழுக்க வருகை தந்தார்.
குடிபெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தேர்தல் அரசியலின் முடிவுகளை பாதிக்க மாட்டார்கள் என்பதால், அவர்கள் கோவிட்-19 நெருக்கடியின் போது மிக சுலபமாக கைவிடப்பட்டனர்.
மேலும், தொழிலாளர்கள் என்ற அடையாளம் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் அரசியல் பாதிப்புகளையும் சேர்க்கிறது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் (துர்)அதிர்ஷ்டவசமாக ஒரு மதம் அல்லது சாதி மூலம் அடையாளம் காணப்படவில்லை.
அவ்வாறு இருந்திருந்தால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் சிரமங்கள் ஒரு மதம் அல்லது ஒரு சாதியுடன் இணைக்கப்பட்டு, அரசியல் சக்திகளின் பதில்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.
மேலும், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள் என்பது இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சுருங்கி வரும் அரசியல் செல்வாக்குடனும் , தொழிற்சங்கங்களின் மிகக் குறைந்த பங்களிப்புடனும் நிறைய சம்பந்தப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியின் போது, அரசாங்கங்களுடன் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்னெடுப்பது அல்லது குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கணிசமான உதவிகளை வழங்குவது போன்றவற்றில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிக முயற்சியை நாம் காணவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களின் பதில்களும் இது போன்று தான் இருக்கும்.
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மூன்றாவது முக்கியமான சமத்துவமின்மை அவர்களின் குறைந்த சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பெரிய அளவிலான அக்கறையின்மைக்கு வழிவகுக்கிறது.
கிராமபுறங்களில் விவசாயத்திலிருந்து நகர்ப்புறங்களில் வேலைகளுக்கு தொழிலாளர்கள் பெரிய அளவில் இடம்பெயர்வதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. விவசாயத்திலிருந்து இடம்பெயரும் இந்த போக்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களின் சமூக அந்தஸ்த்தை கணிசமாக நீர்த்துப்போகச் செய்துள்ளது.
விவசாயத் தொழிலாளர்களாக இருக்கும் போது இந்த தொழிலாளர்கள் சில சமூக அந்தஸ்ததையும் கண்ணியத்தையும் தங்கள் சொந்த இடங்களில் அனுபவித்து வந்தனர். துரதிர்ஷ்டவசமாக ஒரு நகர்ப்புறத்தில் அவர்கள் குடிபெயர்ந்த தொழிலாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்த போக்கு அவர்களின் சமூக முக்கியத்துவத்தை கணிசமாகக் குறைக்கிறது. வேளாண் தொழிலாளர்களை குடிபெயர்ந்த தொழிலாளர்களாக அடையாளத்தை மாற்றுவது என்பது அவர்கள் மீதான சமூக அக்கறையின்மைக்கு பல வழிகளில் நுட்பமான ஆனால் மிகவும் முக்கியமான காரணியாக உள்ளது.
கோவிட் -19 இன் இந்த நெருக்கடியின் போது, குடிபெயர்ந்த தொழிலாளர்களின் சமூக அந்தஸ்தும் தனிப்பட்ட கவுரவமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீர்த்துப் போய் விட்டது.
தொற்றுநோய் பரவலின் காரணமாக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் மற்றும் நாம் முன் கண்டிராத ஊரடங்கு காரணமாக திடீரென வேலை இழப்புக்கு வழிவகுத்தது என்பது குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக அனுபவித்த தொடர்ச்சியான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாதிப்புகளின் விளைவாகும்.
அரசாங்கங்களின் தன்னிச்சையான யோசனையற்ற எதிர்வினைகள் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீதான உணர்வின்மை, பிரச்சினையின் உடனடி மனப்பான்மை மற்றும் கொள்கை முடிவுகளில் தீவிரமான மாற்றங்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
பாதிக்கப்பட்டவர்காக அனுதாபத்துடன் ஒற்றுமையைக் காண்பிப்பதில் குடிமகனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதில் அதிகாரம் அளிப்பதற்கான கோரிக்கைகளையும் வலியுறுத்தினால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க உதவியாய் இருக்கும்.