ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஆர்ஆர் வெங்கடபுரம் பகுதியில் எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலை உள்ளது. அதில் மே 7ஆம் தேதி ஏற்பட்ட ஸ்டைரீன் விபத்தால் 12 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஆலையில் கையிருப்பில் இருக்கும் ஸ்டைரீனை தென் கொரியாவுக்கு அனுப்புவதற்கு ஆலை நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில் விஷ வாயு வெளியான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது எல்ஜி பாலிமர்ஸ் ஆலையை மூட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அந்த உத்தரவில், ''ஆலையில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருள்கள், இயந்திரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் அனுமதிப் பெற்ற பின்னரே வெளியில் கொண்டு வர வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவின்றி அந்த ஆலையில் இயக்குநர் உள்பட யாருக்கும் ஆலையினுள் செல்ல அனுமதியில்லை.
ஆலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்டக் குழுக்கள் உள்ளே செல்ல அனுமதி உண்டு. அவர்கள் உள்ளே செல்வதற்கு முன், ரெஜிஸ்டரில் பதிவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதேபோல் வெளியே வரும்போது, ஆய்வு குறித்த குறிப்புகளையும் பதிவிட வேண்டும்.
இந்த விசாரணை முடியும் வரை ஆலையின் இயக்குநர்கள் அனைவரும் தங்களது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் யாரும் இந்தியாவிலிருந்து வெளியேறக் கூடாது'' என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகள் தங்களின் விசாரணை அறிக்கையை மே 26ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி, மே 28ஆம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தென் கொரியாவுக்கு ஸ்டைரீனை அனுப்பும் எல்.ஜி. பாலிமர்ஸ்