உத்திரப் பிரதேசம் மாநிலம் மஹோபா மாவட்டத்தை அடுத்துள்ளது அஜ்னார். அங்கு புயல் காரணமாக கடந்த ஐந்து நாள்களாக மின்வெட்டு ஏற்பட்டதாக அறிய முடிகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள், மின்சாரத்துறைக்கு புகார் அளித்ததை அடுத்து இளநிலை பொறியாளர் ஒருவரின் தலைமையில் மின்சாரத் துறை ஊழியர்கள் அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பை வழங்க பணியினை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து, தாக்கவும் முற்பட்டார்.
அவ்வேளையில், காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து வருவதை கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர், அந்த நபரை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில், தகராறில் ஈடுபட்ட நபருக்கு ஆதரவாக அஜ்னார் காவல் நிலையத்தின் முன் கூடிய சிலர், முரட்டுத்தனமாக காவலர்கள் மீது கல் வீசுயுள்ளனர். அதில் இளநிலை பொறியாளரும், இரண்டு காவலர்களும் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மஹோபாவின் காவல்துறை கண்காணிப்பாளர் மணிலால் பட்டீதர் கூறுகையில், "அஜ்னார் காவல் நிலையத்தின் மீது கல் வீச்சில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்ட மற்றவர்களை அடையாளம் காண குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம் அருகே இருந்த வாகனங்களும் கிராம மக்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.