குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு இன்று காலை வழக்கமான கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தமது வீட்டிலேயே அவரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். வெங்கய்ய நாயுடுவின் மனைவியான உஷா நாயுடுவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரும் தம்மைதாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தத் தகவலை வெங்கய்ய நாயுடு தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்தக் கூட்டத்தொடரில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்துவைக்கப்படுவதாக, குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து மக்களவை கூட்டத்தொடரும் முன்கூட்டியே முடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிவையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.