தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டி வளாகத்தில் இயங்கி வருவது ஈடிவி தொலைக்காட்சி நிறுவனம். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய இரு மாநில மக்களிடையே நன்கு பரிட்சயமான இத்தொலைக்காட்சியின் சென்னை செய்தியாளராகக் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பணியாற்றியவர் ஸ்ரீநிவாஸ் (48).
இதழியல் துறையில் நேர்மையும், செய்தியாளர்களிடையே நன்மதிப்பையும் பெற்றவராய் விளங்கிய ஸ்ரீநிவாஸ், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு ஹைதராபாத்தில் இயற்கை எய்தினார்.
இவரது மறைவுக்கு பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் முன்னணி செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், செய்தி சேகரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, அதே சமயத்தில் நேர்மையாகவும் பணியாற்றிய ஈடிவி செய்தியாளர் ஸ்ரீநிவாஸ் மரணம் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனிப்பட்ட முறையில் தனக்கு மிகவும் நெருங்கிய நபராக ஸ்ரீநிவாஸ் விளங்கியதாகவும், அவரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தனது ட்வீட்டின் மூலம் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.