இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்று இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றார். அவருக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பூங்கொத்துக் கொடுத்து, கோத்தபய ராஜபட்சவின் முதல் பயணமாக இந்தியா வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததையடுத்து, இரண்டு நாள் பயணமாக கோத்தபய ராஜபக்ச நேற்று இந்தியா வந்தார்.
நேற்று மாநிலங்களவை கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி சென்ற வெளிநாட்டுப் பயணம் குறித்த அறிக்கையை வாசித்தார். இதைப்பற்றி பேசிய வைகோ, இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல் மன்மோகன் சிங் வரை அனைத்து பிரதமர்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், தாங்களே அவைக்கு வந்து விளக்கமளிப்பார்கள். அதுதான் நடைமுறையாக இருந்தது.
ஆனால் பிரதமர் மோடியோ, உலகின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, அவைக்கு வந்து விளக்கமளிக்காமல் உள்ளார். அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமரின் வெளிநாடு பயணம் பற்றி அறிக்கை வாசிக்கிறார். எனவே பிரதமர் மோடியின் வேலையை ஜெய்சங்கர் பார்க்கக்கூடாது.
சில நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர், இலங்கையின் புதிய அதிபருக்கு பூங்கொத்துக் கொடுத்தார். பூங்கொத்து மட்டும் தான் கொடுக்கச் சென்றாரா? எனவும், இலங்கை அதிபராக சிங்களவர்கள் மட்டுமே வாக்களித்து வெற்றிபெற்றதாகக் கூறிய கோத்தபய, இனி தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராணுவம் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபடும் எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழ்நாடு மக்களின் நெஞ்சில் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது. தற்போது அந்த தீயிற்கு மத்திய அரசு பெட்ரோல் ஊற்றியுள்ளது. இந்தியா அழைத்ததனால் தான் இலங்கை அதிபர் கோத்தபய இந்தியா வருகிறாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபராக அனைத்து தரப்பினருக்கும் இருப்பேன். அனைவரின் நன்மையைக் கருத்தில்கொண்டு தான் செயல்படுவோம் என்றார் கோத்தபய. மத்திய அரசு அழைத்ததனால் மட்டுமே இலங்கை அதிபர் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் எனக் கூறினார்.
இதையும் படிங்க: ' கோத்தபய ராஜபக்ச ரத்த வெறி பிடித்த மிகக்கொடியவன்' - வைகோ கடும்தாக்கு