மதிமுக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட வைகோ, நேற்று மாநிலங்களவையில் உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து காட்டமாகத் தனது விமர்சனங்களை முன் வைத்தார்.
அப்போது பேசியவர், "தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் 10 ஆயிரம் கன அடி ஆழத்திற்குக் கிணறு அமைத்து மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதியளிக்கப் பிரதமர் மோடி தொடர்ந்து முயல்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல், பெட்ரோலிய அமைச்சர், இத்திட்டம் என்ன ஆனாலும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்கிறார்" என்றார்.
மேலும், " ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழ்நாடு எத்தியோப்பியாவாக மாறிவிடும். தமிழ்நாடு மக்கள் அகதிகளாக மாறி பிச்சையெடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். ஆகவே இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன்" என்றார்.
இதனையடுத்துப் பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, "கருத்துகளை மட்டும் கூறுங்கள், எச்சரிக்கை எல்லாம் கொடுக்க வேண்டாம்" என்றார்.