உத்ரகாண்ட் மாநிலம் குமாவோன் மண்டலத்தில் உள்ள லோஹகாட் சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் புரண் சிங் ஃபர்தியால். ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரான இவர், அம்மாநிலத்தில் தனக்பூர்-ஜௌல்ஜிபி இடையேயான சாலை கட்டுமானத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார்.
மேலும், அவர் அதன் டெண்டர் ஊழலில் ஒப்பந்தக்காரருடன் பாஜக அரசும் கைக்கோத்துள்ளதாகவும், அதற்கு எதிராகத் தான் போராடுவதாகவும் கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், "ரூ.123 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தக்காரர் மீது, 2017ஆம் ஆண்டிலேயே போலியான ஆவணங்கள் மூலம் ஏலத்தில் உள்நுழைந்ததாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.
2017ஆம் ஆண்டில் ஒப்பந்தக்காரரின் ஏலப் பதிவை ரத்துசெய்து, தனக்பூர் காவல் நிலையத்தில் 23 பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது, அதே ஒப்பந்தக்காரருக்கு இந்த டெண்டரை பாஜக அரசு வழங்கியுள்ளது. இதன் பின்னணி என்ன ?
அப்போதைய கூடுதல் தலைமைச் செயலாளரும், தற்போதைய தலைமைச் செயலாளருமான ஓம் பிரகாஷும் அந்த முறைகேடு குறித்த கோப்புகளை அழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஊழல் நிர்வாகத்தை சகித்துக்கொள்ளவே கூடாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அதனை காப்பாற்றவே தான் செயல்படுகிறேன்.
முதலில், ஊழல் பாதையில் இருந்த கட்சியைக் காப்பாற்ற வேண்டும்" எனக் கூறினார்.