மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களை பாஜகவே ஆட்சி செய்துவருகிறது. அப்படி பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மறைமுகமாக பசுக் காவலர்கள் ஆட்சி மறைமுகமாக நடந்துவருகிறது. அப்படி உத்தரப் பிரதேசத்திலும் பசுக்காவலர்களின் ஆட்சி படு ஜோராக நடக்கிறது.
மாடுகள் இறந்து கிடந்தால் மனிதர்களைக் கொல்வது, மாட்டிறைச்சியை தின்பவர்களை தாக்குவது, மாட்டிறைச்சியை விற்பனை செய்தால் மனித உயிரை எடுப்பது என பசுக் காவலர்கள் என்ற பெயரில் அவர்களின் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தாக்குதல் அனைத்தும் சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமே நடக்கிறது. இதனை கண்டிக்க வேண்டிய மாநில அரசு இதுநாள் வரை அமைதியாக இருக்கிறது.
உணவுக்கு மனிதர்கள் அலைந்துகொண்டிருக்கும் சூழலில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்த மாநிலத்தில் மாடுகளுக்கு தனி ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியும் வைத்தது அம்மாநில அரசு. இப்படி மனிதர்களைவிடவும் மாடுகளை பாதுகாப்பதில் யோகி தீவிர முனைப்பு காட்டிவருகிறார்.
அந்தவகையில், தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் என்ற புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்து அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது. தற்போது உ.பி.யில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில், கடும் குளிரிலிருந்து காப்பாற்ற பசுக்களுக்கு ஸ்வெட்டர் வாங்க அந்த மாவட்டத்தில் உள்ள பைசிங்பூர் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்டமாக 1,200 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் ஸ்வெட்டர், கையுறைகளை வாங்க நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிர்சாப்பூர் என்ற கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தில் சப்பாத்தி வழங்கப்பட்டு அதற்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது.
பள்ளி மாணவர்களுக்கு சரியான உணவை வழங்க முடியாத அரசு தற்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் வழங்குவதன் மூலம், மனிதர்கள் எப்படி போனா எங்களுக்கு என்ன எங்களுக்கு மாடுகள்தான் முக்கியம் என்பது போல் இருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் மாடுகளால் மட்டும் நிறைந்தது இல்லை மனிதர்களாலும் நிறைந்தது எனவே மனிதர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று அம்மாநில அரசுக்கு யாரேனும் நினைவுப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த குளிர் காலத்தில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க முடியாத அரசு மாடுகளுக்கு வழங்கிவருகிறது. இதனை மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.
இதையும் படிங்க:
'ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்காவிட்டால், மூட வேண்டிய நிலை வரும்' - மத்திய அமைச்சர் தகவல்!