புதுச்சேரி நகரப்பகுதியில் ஆயிரத்து 468 ஏக்கர் பரப்பளவில் புதுச்சேரி வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ, 1828 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் புதுச்சேரி நகர வளர்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.103 கோடியும், மாநில அரசு ரூ. 60 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளன. திட்டத்திற்கான மீதித் தொகை நடப்பு நிதியாண்டில் வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில் புதுச்சேரி கடற்கரையில் பழைய துறைமுகத்தில் இருந்து புதிய கலங்கரை விளக்கம் வரை நடைபாதை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று (செப். 16) புதுச்சேரியில் ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் 41 இடங்களில் மிதிவண்டி பகிர்வு நிலையம், 10 நவீன கழிப்பறைகள் அமைத்தல், பல்வேறு இடங்களில் பொது கழிவறைகளை மேம்படுத்துதல், ஐந்து நடமாடும் கழிப்பறைகள் ஆகிய திட்டங்களின் தொடக்கவிழா முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது.
இவ்விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், "எதிர்க்கட்சி உறுப்பினரான தன்னை பழி வாங்குவதாக நினைத்து, எனது தொகுதி மக்களுக்கு திட்டத்தில் நியாயமாக செய்ய வேண்டிய பணியை செய்யவிடாமல் அரசு பழிவாங்குகிறது.
தனது தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்தாமல் காங்கிரஸ் கூட்டணி அரசு, மக்களுக்கு துரோகம் இழைக்கிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.
திட்டத்தில் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அன்பழகன், முதலமைச்சர் தலைமையிலான அரசு விழாவிலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். இதனால் அந்நிகழ்ச்சியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.