உத்தரப் பிரதேச மாநிலம், ஹஷ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் தன்னுடன் பணியாற்றும் சக ஆண் காவலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிவருவதாக புகாரளித்துள்ளார்.
தொடர் மிரட்டல்களால் தற்கொலைக்கும் முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்பெண் காவலர், தன்னுடன் பணியாற்றும் சக ஆண் காவலரான கவுரவ் குமார் என்பவர் மீது இந்த குற்றச்சாட்டை அளித்துள்ளார். இதையடுத்து கவுரவ் குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அதில், இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல்முறையாக சந்தித்ததையடுத்து, நண்பர்களாக பழகிவந்ததாகவும், கவுரவ் குமார் தன்னை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோ பதிவு செய்து தன்னை மிரட்டி பணமும் பறித்துவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும், இதுகுறித்து கேட்ட தன்னை மிரட்டியதாவும், இதனால், ஏமாற்றமடைந்ததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.