கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் நாட்டில் கரோனா வைரஸ் பரவல், அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் இதுவரை 65ஆயிரத்து 288 பேர் உயிரிழந்தும், 36 லட்சத்து 91ஆயிரத்து 167பேர் பாதித்தும் உள்ளனர். இதில் பல முதல் களப்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் உத்திரப்பிரதேச மாநில தலைநகரில் பணியாற்றி வந்த இளம் பத்திரிகையாளர் நீலன்ஷு சுக்லா கரோனா வைரஸ் தொற்றால் பாதித்து நேற்று (ஆக. 31) உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த பத்திரிகையாளருக்கு உபி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அது குறித்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, “பல நாட்களாக கரோனாவால் போராடி வந்த இளம் பத்திரிகையாளர் நீலன்ஷு சுக்லா தற்போது இல்லை என்பது மிகவும் கவலையான செய்தி. சுக்லா ஒரு திறமையான பத்திரிகையாளர், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்” என்றார்.
மேலும், “கரோனாவால் உயிரிழந்த சுக்லா குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் உபி அரசு காப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க...கரோனாவால் கேரளாவில் சிக்கிய தாய், குழந்தை - சொந்த நாடு திரும்ப ஏற்பாடு!