உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஐபிஎஸ் அலுவலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரப் பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தற்போது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
அதில், "லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் குவியவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்தது. இந்த விவகாரத்தை சாதிய ரீதியான மோதலாக மாற்ற அவர்கள் திட்டமிட்டதாகவும் தகவல் கிடைத்தது.
இந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்த பிறகு உடலை தகனம் செய்தோம். சரியாகச் சென்று கொண்டிருக்கும் விசாரணையை திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.