காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளையொட்டி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், "நமது நாடு மற்றும் சமூக வளர்ச்சிக்கு எவ்வாறு பாடுபடவேண்டும் என்று எடுத்துக்காட்டாய் விளங்கிய தேசத் தந்தையின் வழி நடப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மக்களால் தூர வீசப்படும் நெகிழி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு நம் சுகாதாரத்துக்கும் பாதகமாக அமைகிறது என்பதை நாம் உணராதிருக்கிறோம். நெகிழியை உணவென நினைத்து கால்நடைகள் உட்கொள்கின்றன.
கடந்த சுதந்திர தினத்தன்று, நெகிழி பயன்பாட்டுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையைத் தொடங்கினார். இதனை மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையாக்கிக் கொள்ளவேண்டும். சமூக, வணிக பயன்பாட்டிலிருந்து நெகிழி முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து தூய்மை இந்திய குறித்து பேசிய அவர், "கடந்த 5 ஆண்டுகளில் 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2.6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இச்செயல் உலகளவில் பாராட்டுக்களைக் குவித்துள்ளது" என பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க : வைஷ்ணவ ஜனதோ காந்தியின் கீதமான கதை!