உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு சார்பில் 'மிஷன் சக்தி' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த திட்டத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர் பபிதா வர்மா, பெண்களின் துயரங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், பல வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினார். இவரின் சேவையை பார்த்து வியந்த உ.பி., காவல்துறையினர், ஹத்ராஸ் காவல் நிலையத்தில் அவருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
இந்நிலையில், பாஜக கவுன்சிலர் பபிதா வர்மா தனது ஆதரவாளர்கள் 30 பேருடன் இணைந்து கொண்டு, ஏழை பெண்ணின் நிலத்தை மிரட்டி வாங்கும் சம்பவத்தின் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொலியை காங்கிரஸ் பிரமுகர்கள் பகிர தொடங்கியதையடுத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நில அபகரிப்பு குற்றத்திற்காக பபிதா வர்மா, அவரது கணவர் உட்பட மூவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பர்வீன் லக்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.