உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரில் 2018 மார்ச் மாதம், 23 வயது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு ரேபரேலியிலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட பெண், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது, பிணையில் வந்த இருவர் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அப்பெண்ணை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர். இதில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி ஆகியோருக்கு நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, நேற்று கடுமையான போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் உன்னாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையின் போது, எஸ்ஐடி பிரிவின் எஸ்.பி. வி.கே. பாண்டே மேலும் மூன்று நாள் போலீஸ் காவலில் வழங்குமாறு கோரினார்.
இதுகுறித்து நீண்ட விவாதத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் 12 மணி நேரம் அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. வழக்கறிஞர் சஞ்சீவ் திரிவேதி முன்னிலையில் இவர்களிடம் விசாரணை நடைபெறும்.
பாதிக்கப்பட்டவரின் அறிக்கையின் அடிப்படையில், பிரதான குற்றவாளிகளான சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளை இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: உன்னாவ் பாலியல் வழக்கு: ’என் சகோதரர் நிரபராதி’ - சகோதரி பரபரப்பு பேச்சு!