மாநிலங்களவையில் இன்று காஷ்மீர் தொடர்பான மூன்று அம்சங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அதில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், அம்மாநிலத்தை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என்று அமித் ஷா அறிவித்தார். இதற்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய மதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, இது போன்று மத்திய அரசு செயல்படுவது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம் என்றும், நெருக்கடி நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசு முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் பேசிய வைகோ, ஜவஹர்லால் நேரு மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் அவர் சொன்ன உறுதிமொழியை காப்பாற்றவில்லை என வருத்தம் தெரிவித்தார். அனைத்துப் பிரச்னைகளிலும் காங்கிரஸ் ஜனநாயகத்தை படுகொலை செய்வதாக குறிப்பிட்ட வைகோ, இந்த விவகாரத்தில் காங்கிரஸ்தான் முக்கிய குற்றவாளி என்றும் இந்த மசோதாவை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். இதில் ஜக்கிய நாடுகள் சபை நிச்சயம் தலையிடும் எனக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் ட்ரம்ப் தந்திரமாக செயல்படுவதாகவும் சாடினார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இன்று ஜனநாயக படுகொலை அரங்கேறியுள்ளதாகக் கூறி அதற்கு கடும் கண்டனத்தையும் வைகோ பதிவு செய்தார்.