உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது இளைஞர்களுடன் நாட்டின் வேலையின்மை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்.
அப்போது பேசிய அவர், "ஆசிரியர் வேலைக்கான தேர்வை அரசு அனுமதித்தாலும், அவர்களுக்கான பணி நியமன ஆணை கிடைப்பதில்லை. இளைஞர்களுக்கு ஏற்படும் இன்னலை அரசாங்கம் செவிசாய்த்துக் கேட்கவேண்டும்.
இதற்காக, சாலைகள் தொடங்கி சட்டப்பேரவை வரை நாம் போராட வேண்டியிருக்கும். மத்திய, மாநில அரசுகளின் இந்தச் செயலை காங்கிரஸ் ஆதரிக்கப் போவதில்லை.
வேலையின்மை என்பது எங்களுக்கு ஒரு அரசியல் விவகாரம் அல்ல, ஆனால் ஒரு மனிதாபிமான விஷயம். இது நீதிக்கான கேள்வி. காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் இளைஞர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் பலர், தாங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் வழங்காததால் ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைத்தனர். தாங்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பினும் அரசாங்கம் தொடர்ந்து விதிகளை மாற்றிக்கொண்டே வருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினர்.