கோலார் (கர்நாடகா): ஊரடங்கு அமலில் உள்ளதால், தன் தாயின் இறுதிச் சடங்கில் வீட்டிலிருந்தபடியே காணொலி மூலம் பெண் ஒருவர் பங்கேற்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் மல்லூரில் வசித்துவந்த 60 வயதான தாயம்மா, உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார். அவரது மகள் நாகம்மா டொட்டாபல்லூர் என்னுமிடத்தில் வசித்துவருகிறார். ஊரடங்கு அமலிலுள்ள இந்த தருணத்தில், கணவர், குடும்பத்தினர் உள்பட 8 நபர்களுடன் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார்.
வேறு மாவட்டம் என்பதால், ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான உரிய அனுமதியை பெற அங்குச் சென்றுள்ளனர். ஆனால், நாகம்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இறுதியில் தன் தாயின் இறுதிச் சடங்கை காணொலி மூலம் கண்டு கலங்கினார் நாகம்மா. மக்களின் நலனுக்கான ஊரடங்கு என்றாலும், அதனால் சில நேரங்களில் சிலருக்கு உணர்வு ரீதியிலான இழப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன.