இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகக் கூறி பல்வேறு கட்டங்களாக டிக்டாக் உள்ளிட்ட 224 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அதனைத் தொடர்ந்து டிக் டாக் செயலிக்கு மாற்றாக இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற நிறுவனங்களும் தங்கள் தளங்களில் டிக் டாக் செயலியை கொண்டிருந்த வசதிகளை புதிதாக ஏற்படுத்தி வருகின்றன. மறுபுறம் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களும் டிக் டாக் செயலிக்கு மாற்றாக புதிய செயலிகளை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது பாரூக் வாணி, திப்பு சுல்தான் வாணி ஆகிய இளைஞர்கள் இருவரும் சேர்ந்து டிக் டாக் செயலிக்கு மாற்றாக ’Nucular’ என்ற புதிய செயலியை உருவாக்கி உள்ளனர்.
இச்செயலி ப்ளே ஸ்டோர் தளத்தில் வெளியிடப்பட்ட சில நாள்களிலேயே, ஆயிரக்கணக்கானோர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
முன்னதாக இதே சகோதரர்கள் தடைசெய்யப்பட்ட Cam Scanner செயலிக்கு பதிலாக Document Scanner என்ற செயலியையும், SHAREit செயலிக்கு பதிலாக “File SHAREit tool” என்ற செயலியையும் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.