உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக ஆந்திர பிரதேசத்தில் 534 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது. இதனால் வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
ஆந்திராவில் மே 3ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மார்ச் - மே காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட அர்ஜிதா சேவை டிக்கெட்டுகள் அனைத்தையும் ரத்து செய்து, முழு பணத்தைத் திருப்பித் தருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் அனில் குமார் சிங்கால், “ஆந்திர பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு எந்தவிதமான தொற்றுப் பரவலும் ஏற்படாமல் தடுக்க நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.”என்றார்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இறைவனை தரிசனம் செய்ய சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. நுழைவு தரிசன டிக்கெட்டுகள், அர்ஜிதா சேவா டிக்கெட்டுகள், தங்குமிடத்திற்கான பணத்தைச் செலுத்தியவர்களுக்கு, அதனை திரும்ப அளிக்க தேவஸ்தானம் முன்வந்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், முன்பதிவு செய்த பக்தர்களின் டிக்கெட் விவரங்களை அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளது. தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வமான helpdesk@tirumala.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, தங்களது வங்கி கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி குறியீடுகளை அனுப்புமாறு கூறியுள்ளது.
முன்பதிவு செய்தவர்களின் விவரங்களை சரிபார்த்த பிறகு டிக்கெட் தொகையை அந்தந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு தன்னாட்சி அறக்கட்டளையாகும், இது ஆந்திராவின் திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலை நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கரோனா எதிரோலி: திருப்பதி கோயில் மூடல்