2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுபோன்று எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக இந்திய பெருங்கடலில் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டால் தாக்குதலை எதிர்கொள்வதற்காக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்திய சுனாமி பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக மக்களின் பங்களிப்பு இல்லாமல் துறை ரீதியாக காரைக்கால் மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பங்களிப்புடன் இந்த ஒத்திகை நடைபெற்றது. பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பேரிடர் காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அனைத்து துறைகளில் தயார் நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆட்சியரகத்தில் மீட்பு குழுக்களால் கொண்டுவரப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாகன அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிட்டார்.