இரு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, அகமதாபாத்திலுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதனத்தை திறந்துவைக்கவுள்ளார். சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்புடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் தனி விமானத்தின் மூலம் அகமதாமாத் வந்தடைந்தார்.
அதிபர் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். அப்போது பாரம்பரிய நடன கலைஞர்கள் சார்பில் ட்ரம்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபரின் பிரத்யேக பீஸ்ட் கார் மூலம் அவர்கள் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றனர்.
சபர்மதி நதிக்கரையில் உள்ள இந்த ஆசிரமத்தில் அதிபர் ட்ரம்ப்பையும் மெலனியாவையும் சால்வை அணிவித்து நரேந்திர மோடி வரவேற்றார். ஆசிரமம் முகப்பில் உள்ள காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தனர். அப்போது, காந்தியின் அகிம்சை பண்புகள் குறித்தும் அவரது தியாகங்கள் குறித்தும் பிரதமர் மோடி ட்ரம்பிற்கு எடுத்துரைத்தார்.
மேலும், அங்கிருந்த காந்தியின் ராட்டையைப் பார்தது வியந்த ட்ரம்பிடம், ராட்டையின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி எடுத்துக்கூறினார். அதிபர் ட்ரம்ப் அந்த ராட்டையில் நூல் நூற்றார்.
அதைத்தொடர்ந்து, ஆசிரம முகப்பில் இருந்த வருகைப்பதிவேட்டில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். காந்திக்கு பிடித்த குரங்கு பொம்மைகளையும் ட்ரம்ப் மெலனியாவுடன் பார்த்து ரசித்தார். தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காத, தீயதைப் பேசாதே என்ற கருத்தை விவரிக்கும் இந்த மொம்பைகள் குறித்து ட்ரம்ப் ஆரவத்துடன் நரேந்திர மோடியிடம் கேட்டறிந்தார்.
பின், தனது பீஸ்ட் கார் மூலம் அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதனத்திற்கு ட்ரம்ப் புறப்பட்டார்.
இதையும் படிங்க: ஐசனாவர் முதல் ட்ரம்ப் வரை - இந்தியாவுக்கு விசிட் அடித்த அமெரிக்க அதிபர்கள்!