ஹைதராபாத் (தெலங்கானா): மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பத்து நாட்களுக்கு மேலாக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடெங்கிலும் பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை மறுநாள் (டிசம்பர் 8) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் (பாரத் பந்த்) நடத்த விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர் ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது, இது விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என தனது டிஆர்எஸ் (TRS) கட்சி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறிய அவர், இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரை விவசாயிகள் போராட்டத்தைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் நாடு தழுவிய வேலைநிறுத்த அழைப்புக்கு குவியும் ஆதரவு!