ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு எவ்வளவு பார்வையாளர்கள் உள்ளனர் என்பதைக் கணக்கிட டிஆர்பி ரேட்டிங் (TRP Rating) உதவுகிறது. இதனை வைத்தே ஒரு தொலைக்காட்சி சேனலின் பிரபலத்தை மக்கள் அறிந்து கொள்கின்றனர்.
மேலும், விளம்பர வருவாய்க்கும் டிஆர்பிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இதனாலேயே ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கன்றன.
இந்நிலையில், ரிபப்ளிக் உள்பட மூன்று சேனல்கள் தங்களது வருவாயை அதிகரிக்க, டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல் துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது. மேலும், இது குறித்து விசாரணை நடத்துவதற்கு ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை நிதி அலுவலர் சிவசுப்ரமணியம் என்பவருக்கு மும்பை காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சியுடன் சேர்த்து ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா மற்றும் சில விளம்பர நிறுவனங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 12 வாரங்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்படமாட்டாது என்று ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சிக் கவுன்சிலான பார்க் (BARC - Broadcast Audience Research Council) அறிவித்துள்ளது.
இது குறித்து பார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமீபத்திய சம்பவங்களைத் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கை கணக்கிடும் முறையை மேம்படுத்துவதற்கும், டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்யும் முயற்சிகளைத் தடுக்கும் வகையிலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி இந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழிகள், வணிக சேனல்களின் டிஆர்பியை கணக்கிடும் முறை குறித்து பகுப்பாய்வு செய்யவுள்ளோம். எனவே, அடுத்து வரும் எட்டு முதல் பத்து வாரங்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட மாட்டாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க், டிஆர்பியை வாரம் ஒருமுறை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிக் பில்லியன் டே விற்பனை: பிளிப்கார்ட்டின் அதிரடி சலுகைகள்!