இன்று காலை 10.30 மணிக்கு லீலா பேலஸ் உணவக விடுதியில், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்திப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பை அவர் பல மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தாலும், அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவித்தது இதுவே முதல் முறை.
2017ஆம் ஆண்டு அரசியலுக்கு வரப்போவதாக அவர் அறிவித்தபோதும், அது தொடர்பான எவ்வித அரசியல் செயல்பாடுகளும் முழுமையாக நடைபெறவில்லை. இதையடுத்து, சமூக வலைதளங்களில் அவர் அரசியல் பிரவேசம் குறித்த மீம்கள் உலாவத் தொடங்கின. அதில், அரசியலுக்கு வருவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற மீம் மறக்க முடியாத ஒன்று.
இதைப் போலவே, இன்று நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்புக்கும் பல சுவாரஸ்யமான மீம்கள் ட்விட்டரில் பகிரப்பட்டுவருகின்றன. அதில், மார்ச் 12ஆம் தேதிதான் பேசுபொருளாகியுள்ளது.
ரஜினி நடித்து வெளிவந்த பாபா, தர்பார் திரைப்படங்களிலும் இதே மார்ச் 12ஆம் தேதி முக்கிய தினமாக வந்துள்ள நிலையில், நெட்டிசன்கள் இன்றும் தரமான சம்பவம் நடக்கலாம் என்ற தொனியில் இந்த மீமை பகிர்ந்துவருகின்றனர்.