தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ளதால் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ராஜ்பவன், முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
முத்தியால்பேட்டைப் பகுதியில் பேசிய அவர், 'மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல தொழிற்சாலைகள் புதுச்சேரியில் செயல்படவில்லை, ஏழை மக்கள் முதல் அனைவரும் சிரமப்பட்டனர். கறுப்புப் பணம் ஒழியும் என்று தெரிவித்தனர். ஆனால் நாட்டில் ஒழிந்தப்பாடில்லை.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தேர்ந்தெடுத்தால் நாடு முன்னேற்றம் அடையும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்ட கடனை காங்கிரஸ் அரசு தற்போது அடைத்துக் கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசு தற்போது புதுச்சேரிக்கு 25 விழுக்காடு நிதி மட்டுமே வழங்கிவருகிறது, எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் கடனைத் தீர்க்க புதுச்சேரிக்கு அதிக நிதி கிடைக்கும்' என அவர் தெரிவித்தார்.