புதுச்சேரியில் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் முன்னரே வெப்பநிலை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே, வருகின்ற மே 4ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்குகிறது. ஆனால், தமிழ்நாட்டின் சில முக்கிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் அடிப்பது மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது தேர்தல் நேரம் என்பதால் பரப்புரை செய்ய முடியாமல் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்த சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் புதுச்சேரி மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பதால், புதுச்சேரி கடற்கரை சாலை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெயிலின் கொடுமை தாங்கமுடியாமல் ஆங்காங்கே மர நிழலில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஒரு சிலர் கடற்கரையில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி ஆபத்தை உணராமல் வெயிலை தணிக்க குழந்தைகளுடன் குதுகலமாக குளித்து வருகின்றனர்.