அடுத்தாண்டு மே மாதம், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜக பல முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துர்கா விழாவை நடத்தியது.
இந்நிலையில், பாஜகவுக்கு பதிலடி தரும் விதமாக, 'பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள்' என்ற டிஜிட்டல் பரப்புரையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வியூகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. savebengalfrombjp.com என்ற இணையதளத்தின் மூலம், இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து 784 பேர் தாங்கள் பாஜகவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதாக பதிவிட்டுள்ளனர்.
வெறுப்பு அரசியலுக்கு எதிரானவர்களா நீங்கள்? சர்வாதிகாரத்திற்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பீர்களா? போன்ற பல கேள்விகள் இந்த இணையதளத்தில் கேட்கப்படுகின்றன.
இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு தாங்கள் பாஜகவிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் பதிவிட வேண்டும். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெறுப்புவாத அரசியல், சர்வாதிகாரம், சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு ஆதரவாக இருக்கும் பாஜக சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.