சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த போது ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி அனுமதி மறுத்த காவல்துறை, ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக போராட்டம் நடத்த அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினருக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையினர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விண்ணப்பம் பெறாமலே ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: “சிறைத்துறை அதிகாரிகள் தவறிழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது” - நீதிபதிகள் காட்டம்!
எனவே, போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு நேற்று (ஜவனரி 8) நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.