சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் சுமார் 68 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கியது. ஆனால், கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கூறப்படும் கல்வராயன் மலைப் பகுதி மக்கள் சமூக, பொருளாதார மேம்பாடு இல்லாததால் இந்த தொழிலில் கட்டாயத்தால் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, கல்வி மேம்பாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் அமர்வு முன் நேற்று (ஜனவரி 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நிலை குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி பள்ளி மாணவி மரண வழக்கு; ஜாமீன் கோரிய மூவரின் மனுக்களும் தள்ளுபடி..!
அதில், கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் சுமார் பத்தாயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்றும், அவர்கள் கல்வி கற்பதற்காக விலையில்லா சைக்கிள், பாட புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் காலியிடங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும் கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, கல்வி மேம்பாடு தொடர்பான அந்த வழக்கு தொடர்பான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து ஆகியோர் உத்தரவிட்டனர்.