நாடு முழுவதும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
தெலங்கானாவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மாநிலத்தின் அறிவியல் மருத்துவக் கழகத்தில் பிரத்யேகமாகச் சிகிச்சை அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கென தனியாக பட்ஜெட்டும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மாநில அரசால் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட தெலங்கானா மருத்துவ அறிவியல் கழகத்தை, தெலங்கானா காங்கிரஸ் செயல்தலைவரும் எம்.பி.யுமான ரேவந்த் ரெட்டி நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தெலங்கானா அரசு கரோனா பெருந்தொற்றின் ஆபத்தை அறியாமல் அலட்சியமாகச் செயல்படுகிறது. இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக அறிவியல் கழகத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது.
இதற்காக மருத்துவமனையில் 1500 படுக்கைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பார்கள் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை வெளியிட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் மருத்துவமனை குப்பைக்கிடங்குபோல் காட்சி அளிக்கிறது.
இங்கு மருத்துவர்களோ நோயாளிகளோ யாரும் இல்லை, பாதுகாவலர்கள் நான்கு பேர் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்" என்று கடுமையாகச் சாடினார்.