நாடு முழுதிலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்துள்ள ஒரு விஷயம் என்றால் அது டிக்-டாக் செயலி என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் இந்தச் செயலியில் பலதரப்பட்ட வயதினரும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தச் செயலிக்கு தடை விதிக்க வேண்டுமென பலரும் குரல் எழுப்பி வந்தாலும், மக்களிடையே இந்தச் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில், டிக்-டாக் நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை சமூக வழிமுறைகளை பின்பற்றத் தவறிய வகையில் இடம்பெற்றிருந்த 60 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியை முறையாக பயன்படுத்தும் வகையிலும், அதன் பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பாக உணரவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டிக்-டாக் செயலியில் புதிய கணக்கை தொடங்குவதற்கு 13 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற புதிய வயது வரம்பு கொள்கையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, டிக்-டாக் செயலியின் இந்திய பயனீட்டாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனத்தின் சர்வதேச பொது கொள்ளைகளுக்கான இயக்குநர் ஹெலனா லெர்ஸ்ச் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, வங்காளம் உள்ளிட்ட 10 மொழிகளில் டிக்-டாக் பாதுகாப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
மேலும், மக்களவைத் தேர்தலையொட்டி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும், தேர்தல் பணப்பட்டுவாடா போன்ற முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவும் அந்தச் செயலியின் பாதுகாப்பு மையப் பக்கத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.