கடந்த ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, நாட்டில் சீனத் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.
இதனிடையே, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை காரணம் காட்டி டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், டிக் டாக் தடையால் அதன் தாய்நிறுவனமான பைட் டான்ஸிற்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் டிக் டாக் செயலியை 611 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் உள்ள பைட் டான்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டாயிரம் பேரின் வேலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.