’டிக் டாக்’ செயலி மூலம் வெளியிடப்படும் காணொளிகள் ஆபாசமாகவும், சமூக பிரச்னைகளுக்கு காரணமாகவும் இருக்கின்றன. எனவே அந்தச் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ’டிக் டாக்’ செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து, ’டிக் டாக்’ நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ’டிக் டாக்’ செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது. இதற்கிடையே ‘டிக் டாக்’ செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை ப்ளே ஸ்டோர் நீக்கியது.
இதைத் தொடர்ந்து ‘டிக் டாக்’ நிறுவனத்தின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்று தெரிவித்து ‘டிக் டாக்’ நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்படி, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை,”ஆபாச, சமூக சீர்கேடு காணொளிகளை பதிவேற்றம் செய்யக் கூடாது” என்ற நிபந்தனையோடு ‘டிக் டாக்’ மீதான தடையை நீக்கியது.
இந்நிலையில்,’டிக் டாக்’ மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து அதனை தரவிறக்கம் செய்யும் வசதியை ப்ளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது. இதனால், அதன் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.